Saturday, September 11, 2010

அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் (உற்சவ அம்மன்)



மனித குலம் மேம்படுத்த வந்த மரகதம் ஒன்று

மணிமுத்தாற்றாங்கரையில் மௌனமாய் ஒளி வீசுகின்றது. !




ஆம் ! மணிமுத்து நதியின் தென் கரையில், அருள்மிகு மதியாத கண்ட விநாயகர் திருக்கோவிலுக்கு தென்புறம் 500 மீட்டர் தொலைவிலும், அருள்மிகு ஸ்ரீ குரு பகவான் கோவிலுக்கு கிழக்கில் 300 மீட்டர் தொலைவிலும் ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில் உள்ளது. கோவில் அங்கு இருந்தாலும், அம்பாள் அழகு சௌந்தரி குடியிருப்பதென்னவோ அம்பாளை அநுதினமும் அன்புடன் நேசிப்பவர்களின் மனதில் தான்.




தமிழ்க்கடவுளாம் முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களான அம்பா, துலா,நிதர்த்தனி,அப்பிரகேந்தி,மேகேந்தி,வருஷகேந்தி ஆகியோர் மகா சித்திகளான அனிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, வசித்துவம்,பிரகாமியம், ஈசத்துவம் என்ற அஷ்டமாசித்திகளை உபதேசிக்கும்படி திருக்கயிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டினர்.ஈஸ்வரனோ, கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்திகள் தேவையில்லை எனவும், இயற்கையாகவே அவர்கள் அஷ்டமாசித்திகள் அமையப் பெற்றவர்கள் எனவும் கூறினார்.இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வேண்டவே, உமாதேவியாரின் பரிந்துரையின்படி, கயிலை மலையானும் அவர்களுக்கு, கிழக்கு நோக்கி, தெட்சிணா மூர்த்தி வடிவில் அஷ்டமகா சித்துக்களை உபதேசித்து அருளினார். அவ்வாறு உபதேசிக்கும் போது, கார்த்திகை பெண்கள் கவனக்குறைவாக இருக்கவே, நெற்றிக்கண் உடையோனும் சினந்து, கார்த்திகை பெண்களை கதம்ப வனத்தில் கதம்ப மகரிஷி ஆசிரமப் பக்கம் ஆயிரம் ஆண்டுகள் ஆலமரத்தடியில் கல்லாகி கிடக்குமாறு சாபமிட்டார். பக்குவமில்லாதவர்களுக்கு உபதேசம் செய்ய பரிந்துரை செய்த பொன்னழகு மேனியாளான ஸ்ரீ உமா தேவியாரை நாவல் மரத்தடியில் காளியாக தவமிருக்கவும் கட்டளையிட்டார். தேவியை தனியே விட தேவன் மனம் இணங்குமா? காவலாக நந்தி தேசனை அனுப்பி வைத்தார்.ஆயிரம் ஆண்டுகள் கழித்து திரும்பவும் மதுரை சொக்கராக சுவாமி எழுந்தருளிய காலத்தில் பாறைகளாக இருந்த கார்த்திகை மாதர்களை எழுப்பி மீண்டும் அஷ்டமாசித்தி உபதேசித்தார். அதே சமயத்தில், காளியாய் மாற்றிய பாவம் நீங்க , உலகின் அழகியாய் மாற்றி, உமையவளை அழகு சௌந்தரியாய் ஆட்கொண்டார் எம்பெருமான்!




மேற்சொன்ன இந்த நிகழ்வுதான் எம்பெருமான் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 33 ஆம் திருவிளையாடலாக உள்ளது. இத்திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்தான் இன்றைக்கு பட்டமங்கலத்தில் ஸ்ரீ அழகு சௌந்தரி திருக்கோவிலாக உருவெடுத்துள்ளது.அட்டமாசித்தி உபதேசித்த எம்பெருமான் தான், அட்டமாசித்தி தெட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி தனிக்கோவிலில் இருந்து அருள் பாலிக்கிறார்.



அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில்


ஒரே கோவிலில் பயமுறுத்தும் காளியாகவும், அரவணைக்கும் அழகு அன்னையாகவும் அம்பாளை காண்பதரிது. ஆனால் பட்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீ அழகு சௌந்தரி கோவிலில்தான் உமையவள், நவமரத்தடியில் காளியாகவும், அழகின் அழகியான அழகு சௌந்தரியாகவும் இருந்து அருள் பாலித்து வருகிறாள். கருவறை,அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிரகாரம் மதில் சுவர்களுடன் கூடிய திருக்கோவில்.கோவில் முன்புறம் அம்மன் குளம் என்ற தீர்த்தகுளம் உள்ளது.மேலும் அம்பாளுக்கென உள்ள நந்தவனம் ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் கோவிலின் முன் உள்ளது. இங்கு மலரும் பூக்கள் அம்பாளின் பூஜைக்காக பயன்படுத்தப்படுகின்றது.



ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் தன் நாற்கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது மேற்கரம் பாசமும், இடது கீழ்க்கரம் பான பாத்திரம் கொண்டு, வலது திருவடி சம்மன நிலையிலும், இடது திருவடி அசுரனை அடக்கியும் காட்சி தரும் அருட்கோலத்தில் அன்னையாக காட்சி தருகிறாள்.எதிரே அஸ்திர தேவர் வேதாளம் பலி பீடம் உள்ளது.மேற்கு பிரகாரத்தில் முன்புறம் விநாயகரும், தண்டபாணியும், கிழக்கு பகுதியில் ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில், "ஸ்ரீ நவயடிக்காளி" அட்டதிருக்கரங்களுடன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கன்னிமூலை கணபதியும், கோவில் ராஜகோபுரம் முன்புறம் நந்தி மண்டபத்தில் நந்தியும், கோவில் வெளிபிரகாரச் சுற்றில் பெரிய கருப்பர், சின்ன கருப்பர், ஸ்துல லிங்க பீடம் வடிவில் உள்ளனர்.கோவிலின் மேற்கு புறம் கார்த்திகை பெண்கள் அம்பா, துலா,நிதர்த்தனி,அப்பிரகேந்தி,மேகேந்தி,வர்ஷ்யேந்தி தனியே வடக்கு நோக்கி இருக்கிறார்கள்.



இத்திருக்கோவிலில் பங்குனி உத்தரத்தில் திருத்தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. நவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. அழகு சௌந்தரியை அன்றாடம் நினைப்பவர்கள், அகிலத்தில் வானளவு புகழ் பெறுவர் என்பதில் ஐயமில்லை. இத்திருக்கோவிலில் ஸ்ரீ நவயடிக் காளியையும் , ஸ்ரீ அழகு சௌந்தரியையும் தரிசித்து விட்டு ஸ்ரீ தெட்சிணாமூர்த்தியையும் வணங்கி வந்தால் ஊழ் வினை அகன்று,மனதில் நிம்மதி நிலைத்தோங்கும்!




நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் நாயகியே

காவல் பலபுரிந்து காத்தருள்வாய் எம்குலத்தை

ஆவல் மிகக் கொண்டேன் அழகு சௌந்தரியே

அருள் புரிவாய் அம்மா..!


No comments:

Post a Comment