Saturday, September 11, 2010

அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் (உற்சவ அம்மன்)



மனித குலம் மேம்படுத்த வந்த மரகதம் ஒன்று

மணிமுத்தாற்றாங்கரையில் மௌனமாய் ஒளி வீசுகின்றது. !




ஆம் ! மணிமுத்து நதியின் தென் கரையில், அருள்மிகு மதியாத கண்ட விநாயகர் திருக்கோவிலுக்கு தென்புறம் 500 மீட்டர் தொலைவிலும், அருள்மிகு ஸ்ரீ குரு பகவான் கோவிலுக்கு கிழக்கில் 300 மீட்டர் தொலைவிலும் ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில் உள்ளது. கோவில் அங்கு இருந்தாலும், அம்பாள் அழகு சௌந்தரி குடியிருப்பதென்னவோ அம்பாளை அநுதினமும் அன்புடன் நேசிப்பவர்களின் மனதில் தான்.




தமிழ்க்கடவுளாம் முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களான அம்பா, துலா,நிதர்த்தனி,அப்பிரகேந்தி,மேகேந்தி,வருஷகேந்தி ஆகியோர் மகா சித்திகளான அனிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, வசித்துவம்,பிரகாமியம், ஈசத்துவம் என்ற அஷ்டமாசித்திகளை உபதேசிக்கும்படி திருக்கயிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டினர்.ஈஸ்வரனோ, கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்திகள் தேவையில்லை எனவும், இயற்கையாகவே அவர்கள் அஷ்டமாசித்திகள் அமையப் பெற்றவர்கள் எனவும் கூறினார்.இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வேண்டவே, உமாதேவியாரின் பரிந்துரையின்படி, கயிலை மலையானும் அவர்களுக்கு, கிழக்கு நோக்கி, தெட்சிணா மூர்த்தி வடிவில் அஷ்டமகா சித்துக்களை உபதேசித்து அருளினார். அவ்வாறு உபதேசிக்கும் போது, கார்த்திகை பெண்கள் கவனக்குறைவாக இருக்கவே, நெற்றிக்கண் உடையோனும் சினந்து, கார்த்திகை பெண்களை கதம்ப வனத்தில் கதம்ப மகரிஷி ஆசிரமப் பக்கம் ஆயிரம் ஆண்டுகள் ஆலமரத்தடியில் கல்லாகி கிடக்குமாறு சாபமிட்டார். பக்குவமில்லாதவர்களுக்கு உபதேசம் செய்ய பரிந்துரை செய்த பொன்னழகு மேனியாளான ஸ்ரீ உமா தேவியாரை நாவல் மரத்தடியில் காளியாக தவமிருக்கவும் கட்டளையிட்டார். தேவியை தனியே விட தேவன் மனம் இணங்குமா? காவலாக நந்தி தேசனை அனுப்பி வைத்தார்.ஆயிரம் ஆண்டுகள் கழித்து திரும்பவும் மதுரை சொக்கராக சுவாமி எழுந்தருளிய காலத்தில் பாறைகளாக இருந்த கார்த்திகை மாதர்களை எழுப்பி மீண்டும் அஷ்டமாசித்தி உபதேசித்தார். அதே சமயத்தில், காளியாய் மாற்றிய பாவம் நீங்க , உலகின் அழகியாய் மாற்றி, உமையவளை அழகு சௌந்தரியாய் ஆட்கொண்டார் எம்பெருமான்!




மேற்சொன்ன இந்த நிகழ்வுதான் எம்பெருமான் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 33 ஆம் திருவிளையாடலாக உள்ளது. இத்திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்தான் இன்றைக்கு பட்டமங்கலத்தில் ஸ்ரீ அழகு சௌந்தரி திருக்கோவிலாக உருவெடுத்துள்ளது.அட்டமாசித்தி உபதேசித்த எம்பெருமான் தான், அட்டமாசித்தி தெட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி தனிக்கோவிலில் இருந்து அருள் பாலிக்கிறார்.



அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில்


ஒரே கோவிலில் பயமுறுத்தும் காளியாகவும், அரவணைக்கும் அழகு அன்னையாகவும் அம்பாளை காண்பதரிது. ஆனால் பட்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீ அழகு சௌந்தரி கோவிலில்தான் உமையவள், நவமரத்தடியில் காளியாகவும், அழகின் அழகியான அழகு சௌந்தரியாகவும் இருந்து அருள் பாலித்து வருகிறாள். கருவறை,அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிரகாரம் மதில் சுவர்களுடன் கூடிய திருக்கோவில்.கோவில் முன்புறம் அம்மன் குளம் என்ற தீர்த்தகுளம் உள்ளது.மேலும் அம்பாளுக்கென உள்ள நந்தவனம் ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் கோவிலின் முன் உள்ளது. இங்கு மலரும் பூக்கள் அம்பாளின் பூஜைக்காக பயன்படுத்தப்படுகின்றது.



ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் தன் நாற்கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது மேற்கரம் பாசமும், இடது கீழ்க்கரம் பான பாத்திரம் கொண்டு, வலது திருவடி சம்மன நிலையிலும், இடது திருவடி அசுரனை அடக்கியும் காட்சி தரும் அருட்கோலத்தில் அன்னையாக காட்சி தருகிறாள்.எதிரே அஸ்திர தேவர் வேதாளம் பலி பீடம் உள்ளது.மேற்கு பிரகாரத்தில் முன்புறம் விநாயகரும், தண்டபாணியும், கிழக்கு பகுதியில் ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில், "ஸ்ரீ நவயடிக்காளி" அட்டதிருக்கரங்களுடன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கன்னிமூலை கணபதியும், கோவில் ராஜகோபுரம் முன்புறம் நந்தி மண்டபத்தில் நந்தியும், கோவில் வெளிபிரகாரச் சுற்றில் பெரிய கருப்பர், சின்ன கருப்பர், ஸ்துல லிங்க பீடம் வடிவில் உள்ளனர்.கோவிலின் மேற்கு புறம் கார்த்திகை பெண்கள் அம்பா, துலா,நிதர்த்தனி,அப்பிரகேந்தி,மேகேந்தி,வர்ஷ்யேந்தி தனியே வடக்கு நோக்கி இருக்கிறார்கள்.



இத்திருக்கோவிலில் பங்குனி உத்தரத்தில் திருத்தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. நவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. அழகு சௌந்தரியை அன்றாடம் நினைப்பவர்கள், அகிலத்தில் வானளவு புகழ் பெறுவர் என்பதில் ஐயமில்லை. இத்திருக்கோவிலில் ஸ்ரீ நவயடிக் காளியையும் , ஸ்ரீ அழகு சௌந்தரியையும் தரிசித்து விட்டு ஸ்ரீ தெட்சிணாமூர்த்தியையும் வணங்கி வந்தால் ஊழ் வினை அகன்று,மனதில் நிம்மதி நிலைத்தோங்கும்!




நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் நாயகியே

காவல் பலபுரிந்து காத்தருள்வாய் எம்குலத்தை

ஆவல் மிகக் கொண்டேன் அழகு சௌந்தரியே

அருள் புரிவாய் அம்மா..!


Saturday, September 4, 2010

அருள்மிகு மதியாத கண்ட விநாயகர் திருக்கோவில்

அருள்மிகு மதியாத கண்ட விநாயகர்  உற்சவர்

பட்டமங்கல நாட்டின் நடுநாயகமாக உள்ளது இத்திருக்கோவில். மூலவர் மதியாத கண்ட விநாயகர். மதி (சந்திரன்), ஆதவன் (சூரியன்) கண்டு வழிபடப்பட்ட விநாயகர். இத்திருக்கோவிலுள்ள விநாயகர் மதுரை பாண்டியன் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டு கீழக்கோட்டை என்னும் கிராமத்தில் வைத்திருந்து பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மூர்த்தி மிக சிறியவர், கீர்த்தி மிக்கவர்.


கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் கம்பீரமாகவும், மதில் சுவரின் பிரகாரமும், ஈசான்ய மூலையில் கரூவூலறையும் அமைந்துள்ளது. முன்மண்டபக்கொட்டகை வெளிப்புறம் கிழக்கு நோக்கி வடக்கு தெற்குகளில் இரு திண்னணைகளும் கூடியது.





 
சேதுராயர்


மேலும் ஈசான்ய மூலையில் கல்விக்கு தெய்வமாக எழுத்தாணியுடன் சேதுராயர் வீற்றிருக்கிறார். இந்த சேதுராயரின் வம்சாவளியினர் இன்றும் பட்டமங்கலத்தில் வசித்து வருகின்றனர்.இன்றைக்கு நாட்டுக் கணக்கு பிள்ளை என்றழைக்கப்படும் சேதுராயர் வம்சாவளியினர் சிவகங்கை சமஸ்தானத்தால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களின் முன்னோர் ராமநாதபுரம் அரண்மனையில் அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.



கோவிலின் தென்புறம் திருக்குளம், தென்னந்தோப்பும், முன்புறம் ஸ்ரீ அழகு சௌந்தரி நந்தவனமும் உள்ளன.


                    "மதியாத கண்ட விநாயகா உன்னைத்                     
                     
                      துதித்து உன்பாதம் சரணடைந்த பக்தருக்கு

                     விதியாலே எதுவறினும் மதியாலே வெல்ல வெற்றிக்
                    
                      கதிபதியே அருள் தருவாய்"









பட்டமங்கல நாட்டில் உள்ள கோவில் ஸ்தலங்கள்

ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் திருக்கோவில்.

ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில்.


ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில்.


ஸ்ரீ அட்டமாசித்தி தெட்சிணாமூர்த்தி திருக்கோவில்.


ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.


ஸ்ரீ தேரடி விநாயகர் திருக்கோவில்.


ஸ்ரீ வெள்ளானை அய்யனார் திருக்கோவில்.


ஸ்ரீ சமயக் கருப்பர் திருக்கோவில்.


ஸ்ரீ கரியமலை சாத்த அய்யனார், ஸ்ரீ ராவுத்தராயர் திருக்கோவில்.


ஸ்ரீ நயினார் திருக்கோவில்.


ஸ்ரீ சித்தம் காத்த அய்யனார் திருக்கோவில்.


ஸ்ரீ மாணிக்க நாச்சி அம்பாள் திருக்கோவில்.


ஸ்ரீ சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோவில்.


ஸ்ரீ முத்து முனியப்பா திருக்கோவில்.


ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோவில்.


ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில்.


ஸ்ரீ வல்ல நாட்டு கருப்பர் திருக்கோவில்.


பள்ளி வாசல்


மாதா கோவில்

பட்டமங்கல நாடும் அதன் உள் கிராமங்களும்


பட்டமங்கலம் ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் திருக்கோவிலையும், ஸ்ரீ அழகு சௌந்தரி நந்தவனத்தையும் மையமாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

  • தெற்குத் தெரு : பண்ணை திருத்தி, தெற்கு வீட்டார், சுள்ளங்குடி.

  • கீழத்தெரு : வெளியாரி, கட்டுக்கண்பட்டி, தெற்கு நயினார் பட்டி.

  • வடக்குத்தெரு : நயினார் பட்டி.

  • மேலத்தெரு : வேளனிப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, அப்பாகுடிப்பட்டி, மின்னக்குடிப்பட்டி, அலிசனங்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி.

  • காட்ரூப்பார் : கக்காட்டிருப்பு, மு.புதூர், கருவேல் குறிச்சி, தானிப்பட்டி, வயிரவன்பட்டி, சாமந்தப்பட்டி, ஜமேதார்பட்டி, கத்தாளம்பட்டு, சின்ன ஓலைக்குடி, பெரிய ஓலைக்குடி, வைக்குடிப்பட்டி, சிலந்தகுடி,நரியங்குடி, கருங்குளம், சுக்காம் பட்டி, குறிச்சிப்பட்டி, கோட்டுத்துரைப்பட்டி.

  • கீழக்கோட்டை : கொட்டகுடி,ஆலவிளாம்பட்டி, சடையன்பட்டி, கொல்லாம்பட்டி, பொய்யாமுனிப்பட்டி, ஊடனிப்பட்டி, கொங்கராம்பட்டி.

பட்டமங்கல நாட்டின் அமைப்பு




பட்டமங்கல நாட்டின் நடு நாயகமாக அருள்மிகு ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலையும் ,இதன் முன்னே அமைந்துள்ள ஸ்ரீ அழகு சௌந்தரி நந்தவனத்தையும் மையமாக கொண்டே பட்டமங்கல நாடு நல்ல நகர அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.



வீரம் செறிந்த இந்த பட்டமங்கல மண்ணை மணிமுத்தாறு பாய்ந்து குளிர்விக்கின்றது. பட்டமங்கல நாட்டின் நாற்ப்புறத்திலும் கண்மாய்களும், குளங்களும் குளிர்ச்சி படுத்துகின்றன. இவற்றில் அம்மன் குளம், அட்டமாசித்தி பொற்றாமரை குளம், தெப்பக் குளம், செட்டியார் குளம், தலைக்காணி ஊரணி, அரசு ஊரணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வீதிகள் காற்றோட்டம் உள்ளனவாக சுகாதார முறையில் நாட்டின் அமைப்பு விளங்குகிறது.


எல்லாவற்றிக்கும் மேலாக, பட்டமங்கல நாட்டை நான்கு திசைகளிலிருந்தும் காவல் தெய்வங்கள் முறையே



தெற்கே ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாளும், ஸ்ரீ ஆலத்தி அய்யனாரும்,



வடக்கே ஸ்ரீ கரியமலை சாத்த அய்யனாரும், ஸ்ரீ ராவுத்தராயரும், ஸ்ரீ நயினாரும் ,


மேற்கே வேளனிப்பட்டி ஸ்ரீ சித்தம் காத்த அய்யனாரும், ஸ்ரீ மாணிக்க நாச்சி அம்பாளும்,


கிழக்கே ஸ்ரீ வல்ல நாட்டு கருப்பரும்


கோவில் கொண்டு கண்ணின் இமை போல காத்து வருகிறார்கள்.
கோவில் சூழ் இந்த பட்டமங்கல நாட்டில் பிறப்பதற்கு எவ்வளவு மாந்தவம் செய்திருக்க வேண்டும் !!

பட்டமங்கல நாட்டின் அமைவிடம்

பட்டமங்கல நாடானது, செந்தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில், திருப்பத்தூரிலிருந்து தெற்கே 5கி.மீ தொலைவிலும் திருக்கோட்டியூரிலிருந்து கிழக்கே 5கி.மீ தொலைவிலும் உள்ளது.

மேலும் இது திருப்பத்தூர், திருக்கோட்டியூர், காரைக்குடி, கல்லல் ஆகிய பெருநகரங்களுடன் தொடர்பு கொள்ளும்படி சாலை அமைப்புடனும் போக்குவரத்து வசதிகளுடன் இருந்து வருகிறது.

http://wikimapia.org/6212800/Pattamangalam

Saturday, August 28, 2010

வரலாறு

பாண்டியர், நாயக்கர் ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப்பின் சேதுபதிகளின் சமஸ்தான ஆட்சி நாடுகள் 72-ல் பட்டமங்கல நாடு ஒன்று. 1730 -35-ல் கிழவன் சேதுபதியாகிய பெரிய கட்டயத்தேவனின் ஆட்சியில் தமது மைத்துனராகிய புதுக்கோட்டைத் தொண்டமானுக்கு தனி ராஜ தானியும், தன் மருகர் சிவகங்கை தலைவனுக்கு தமது அரசில் 5-ல் 2 பங்கு கொடுத்து சிவகங்கை சமஸ்தானம் ஏற்படுத்திய காலத்தில் பட்டமங்கலம் சிவகங்கை சமஸ்தான மன்னர் ஆட்சிக்கு உட்பட்டது. இராமநாதபுரம் சமஸ்தான எல்லைக்கு உட்பட்ட நிலங்களில் ஏதேனும் ஒன்றில் இஷ்டப்படி ஒரு செய் கதிர் அறுத்துக் கொள்ளும் உரிமையும் பட்டமங்கல நாட்டுக்கு சேதுபதியால் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை ராஜ ரகசிய நிருபங்கள் பட்டமங்கல நாட்டார் பார்வையிட்ட பிறகே மற்ற நாட்டாருக்கு அனுப்புவது அக்காலத்தில் வழக்கமாயிருந்தது. பட்டமங்கல நாட்டாரை "ஆணை" என்றே ரகசிய சொல்லால் குறிப்பிட்டார்கள். "ஆணை அருள் உடையவன் காண்க" என்றே ராஜ நிருபங்கள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டன.

பட்டமங்கல நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் பல கிராமங்கள் இருந்தன. பல்வேறு காரணங்களால் தற்போது அதன் எண்ணிக்கை 22 1/2 - ஆக குறைந்துள்ளன.இன்றைக்கும் இந்த 22 1/2 கிராமங்களை சேர்ந்தவரும் பட்டமங்கல நாட்டில் நடக்கும் திருவிழாக்களிலும், இதர முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்வர். மேலும் திருவிழாக் காலங்களில் இந்த கிராமத்தினரின் தொண்டூழியம் மெய் சிலிர்க்க வைக்கும்.அந்த சமயங்களில் உள்ளூரில் வசிப்போரும், இவர்களை வரவேற்று, உபசரித்து , தக்க மரியாதையுடன் வழியனுப்புவர்.